மூன்று அமைச்சர்களும் பதவிவிலக வேண்டும்!
மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 5 பேர் பலியானதைக் குறிப்பிட்டு, "மதுரை அரசு மருத்துவமனை டீனைக் கைது செய்! அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் பதவி விலகவேண்டும்!' என மதுரையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal_72.jpg)
ஜி.ஹெச்-ல் 5 பேர் பலியானதற்கு, அமைச்சர்கள் ஏன் பதவி விலகவேண்டும் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மா.செ. லயன்ஸ் அந்தோணிராஜுவிடம் கேட்டோம்.…
""மதுரைன்னாலே நாங்கதான்னு சொல்லிக்கிட்டிருக்காங்க செல்லூர் ராஜுவும், உதயகுமாரும். கலெக்டர் வந்துதான் கார் கதவைத் திறக்கணும்; கூப்பிட்டதும் கமிஷனர் முன்னால வந்து நிற்கணும்னு எதற்கெடுத்தாலும் மதுரை மாவட்டத்துல இவங்களோட அதிகாரம்தான். ஆனா… இந்த 5 பேர் அநியாயமா பலியான விஷயத்துல இப்பவரைக்கும் வாய் திறக்கல. அதனாலதான், பதவி விலகச் சொல்றோம்.
அப்புறம் மதுரை ஜி.ஹெச். டீன் வனிதா இருக்காங்கள்ல. அவங்க என்னடான்னா…"மதுரை ஜி.ஹெச்.ல ஒருநாளைக்கு 20, 30 பேர் சாகுறாங்க. அதுல இந்த 5 பேரும் அடக்கம். மின்தடைக்கும், நோயாளிகள் இறந்ததுக்கும் சம்பந்தம் இல்ல'ன்னு பேட்டி கொடுக்கிறாங்க.
நாங்க போஸ்டர் ஒட்டினதும், ‘ஜி.ஹெச்.ல எதுவும் சரியில்ல. யாருமே ஒழுங்கா வேலை பார்க்கலன்னு போன்மேல போன். புகார் சொன்னவங்ககிட்ட விபரத்த வாங்கிட்டு, வக்கீலை அனுப்பியிருக்கோம்'' என்றார்.
மதுரை மட்டுமல்ல… தமிழகத்தின் பல ஊர் அரசு மருத்துவமனைகளிலும் இதுதான் நிலைமை.
-ராம்கி
குப்பைத்தொட்டியில் கிடந்த மரகதலிங்கம்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal1_67.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மனோன்மணியம்மன் கோவில். கடந்த 2017 ஜனவரி 09-ந்தேதி இந்தக் கோவிலின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், அம்மன் தாலி உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டன.
இதுபற்றி வேட்டவலம் காவல்நிலையத்தில் ஜமீன் மகேந்திரபந்தாரியர் கொடுத்த தகவலின் பேரில் புகார் பதிவுசெய்யப்பட்டது. நூறுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் ஜமீன் வளாகம், கோவில் அமைந்துள்ள குன்று மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் பலனில்லை. ஓராண்டுக்கு முன்னர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை, மே முதல் வாரத்தில் ஏ.டி.எஸ்.பி. மாதவன், டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையிலான டீம் விசாரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், மரகதலிங்கம் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள தகவல்படி, ஜமீன்தார் என அழைக்கப்படும் மகேந்திரன் வீட்டில் பல ஆண்டுகளாக வேலைசெய்து வரும் பச்சையப்பன் (50), மே 15-ந் தேதி ஜமீன் வளாகத்தை சுத்தம்செய்து குப்பைகளைக் கொட்டியபோது மரகதலிங்கத்தைக் கண்டெடுத்திருக்கிறார்.
அதனை மனோன்மணியம்மன் கோவிலில் குருக்களாக இருந்த சத்தியமூர்த்தியிடம் காட்டி உறுதி செய்துவிட்டு, ஜமீன் வளாகத்திலிருக்கும் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறார் பச்சையப்பன். இதுபற்றி கோவிலின் தற்போதைய அய்யர் சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டு, பச்சையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 16-ந் தேதி வேட்டவலம் வந்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மரகதலிங்கத்தைப் பார்வையிட்டுவிட்டு, இந்த விவகாரத்தை மீண்டும் தீவிர விசாரணைக்குள் கொண்டுவர உத்தரவிட்டுள்ளார்.
-து.ராஜா
மகளுக்காக கொலை செய்த 67 வயது முதியவர்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/signal2_48.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (67). மே. 12-ந்தேதி இரவில் விருத்தாசலம் அருகே ஆய்வாளர் சாகுல்அமீது தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட டீம், ஆட்டோவில் வந்த ஏழுமலையை விசாரித்தது. ஆட்டோவில் ரத்தக்கறைகள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஏழுமலையிடம் நடத்திய விசாரணையில் தன் மகளுக்காக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ஏழுமலை தந்த வாக்குமூலத்தில்…""எனது ஆசைமகளான ஆனந்தவள்ளியை, மின்வாரியத்தில் பணிபுரிந்த சண்முகத்திற்கு திருமணம் செய்துவைத்தேன். மகிழ்ச்சியாக இருந்த அவர்களின் வாழ்வில் திட்டக்குடி பணிமனையில் அரசு கண்டக்டராக பணிபுரிந்துவந்த குமரவேல் நுழைந்தான். ஆனந்தவள்ளியோடு பழகி நெருக்கமானான். ஏற்கனவே மனைவியை இழந்தவனான குமரவேல் ஆனந்தவள்ளியைக் கூட்டிச்சென்று வைத்துக்கொண்டான்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் ஆனந்தவள்ளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நொந்துபோய், குமரவேல் பணிபுரியும் பணிமனையில் முறையிட்டேன். ஏழுமலையின் ஒப்புதல் இல்லாமல் வேலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் சொல்லிவிட்டனர். அதற்காக பலரைவைத்து முயற்சித்த குமரவேல், இறுதியில் நேரடியாக முறையிட்டான்.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல அவனோடு பழகி, அவனது மதுப்பழக்கத்தைப் பயன்படுத்தி அதிக மதுவாங்கிக் கொடுத்து கழுத்தை அறுத்து கொன்றுவிட்டேன். அவனது சொந்த ஊரான இலைகடம்பூர் அருகேயுள்ள ஓடையில் சடலத்தை வீசினேன்''’என்று கூறியிருக்கிறார்.
67 வயது முதியவரால் தனியொருவராக கொலை செய்திருக்க முடியாது என்று சந்தேகித்த காவல்துறை, முறைப்படி விசாரித்ததில் ஏழுமலையின் மனைவி வசந்தி, ஆனந்தவள்ளியின் கணவர் சண்முகத்திற்கும் கொலையில் தொடர்பிருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது.
"போலீசார் இரவுநேர ரோந்து மூலம் இதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-எஸ்.பி.சேகர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05-21/signal-t.jpg)